தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. ஒரே வாரத்தில் 650-க்கும் மேற்பட்ட டெண்டர்களை அறிவித்து காண்ட்ராக்ட்டை ஒப்படைக்கும் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள் துறையின் உயரதிகாரிகள்.
தமிழக நெடுஞ்சாலை துறையின் தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்தில்‘ நடைபெற்ற ஊழல்களை கடந்த மாதம் அம்பலப்படுத்தி யிருந்தோம். இந்த ஊழல்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 21 ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்த வழக்கில், ஸ்டே கொடுக் கப்பட்டிருக்கிறது.
கொரோனா நெருக்கடியால் தமிழக அரசுக்கு 35ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள சூழலில், நெடுஞ்சாலைத்துறையின் அமைச்சரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் கடந்த வாரம் 650 டெண்டர்களுக்கான புதிய அறி விப்பை வெளியிட்டிருக்கிறார்கள் துறையின் உயரதிகாரிகள். இதன் மொத்த மதிப்பீடு 5,500 கோடி ரூபாய்.
இது குறித்து விசாரித்தபோது, ""தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தமிழகம் முழுவதும் 59,405 கி.மீ.சாலைகளை பராமரித்து வருகிறது. ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் கடந்த 15 வருடங்களாக சாலைகளில் உள்ள அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அரசு பட்ஜெட்டில் பெரும்தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக கடந்த 15 ஆண்டுகளில் செலவிடப்பட்ட தொகை 36,000 கோடி ரூபாய்.
ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் கூடுதலாக பெறுகிறது இந்த திட்டம். குறிப்பாக, கடந்த நிதி ஆண்டில் 4,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நடப்பு நிதியாண்டில் 5,500 கோடி ரூபாயை நிதியமைச்சர் ஓபிஎஸ்சிடமிருந்து இத்திட்டத்திற்காகப் பெற்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. ஒரு நிதியாண்டில் ஒதுக்கப்படும் தொகை, அந்த நிதியாண்டிற்குள் செலவிடுவதற் கேற்பவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திற்கு பிறகுதான் இத்திட்டத்திற்கான அறிக்கை தயாரித்து அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள். அதற்கான ஒப்புதலை ஆகஸ்ட் இறுதியில் அரசு பிறப்பிக்கும். அதன்பிறகே டெண்டர் நடைமுறைகள் தொடங்கும். ஆனால், இந்த நிதியாண்டில் 5,500 கோடிக்கான சாலை பணிகளுக்கும் கடந்த மார்ச் மாதத்திலிருந்தே திட்ட அறிக்கை தயாரித்து அதற்கான ஒப்புதலை அரசிடமிருந்து பெற்று விட்டார் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் தலைமை பொறியாளர் சாந்தி.
கொரோனாவின் தாக்கம் ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையிலும், தமிழகம் முழுவதுமுள்ள நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை சென்னைக்கு வரவழைத்து திட்ட அறிக்கையை தயாரிக்க வைத்திருக்கிறார் சாந்தி. அதற்கான 650-க்கும் மேற்பட்ட டெண்டர்கள்தான் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டெண்டர் மதிப்பீட்டில் 15 சதவீதம் ஆட்சியாளர்களுக்கு, 9 சதவீதம் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இத்திட்டத்திற்காக மேலும் 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான ஒப்புதலை பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5,500 கோடி ரூபாயையும் செலவு செய்வதற்காகவே கொரோனா காலத்திலும் டெண்டர்களை அறிவித் துள்ளனர்‘’ என ஊழல் களை சுட்டிக்காட்டுகிறார் கள் நேர்மையான அதிகாரிகள்.
டெண்டர்களுக்கான ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு, மதிப்பீடுகளை முடிவு செய்யவேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 வட்டங்களும் அவைகளின் கட்டுப்பாட்டில் 41 கோட்டங்களும் இருக்கின்றன. 41 கோட்ட பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் அனைவரையும் 8 வட்ட அலுவலகங்களுக்கும் வரச்சொல்லி மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகளை 2 வாரமாக முடுக்கி விட்டுள்ளார் தலைமை பொறியாளர் சாந்தி.
ஒவ்வொரு கோட்டத்திலிருந்தும் சுமார் 120 பேர் வட்ட அலுவலகங்களுக்கு வந்து போகின்றனர். உதாரணமாக, சென்னை வட்ட அலுவல கத்துக்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பொறியாளர்களும் அலுவலர்களும் வந்து போகிறார்கள். இங்கு மதிப்பீடுகள் செய்யும் பணிகள் ரகசியமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளின் போது சமூக இடை வெளியும், முககவசமும் முற்றிலும் விலக்கப்பட்டி ருக்கிறது. திட்ட மதிப்பீடுகள் முடிவு செய்து அதனை சாந்தியிடம் ஒப்படைத்து ஒப்புதல் பெறும் பணியும் வேகமெடுத்துள்ளது. இதற்காக நெடுஞ்சாலைத் துறை தலைமையகம் வரும் கோட்ட பொறியாளர்கள் தங்குவதற்காக, நெடுஞ்சாலைத்துறையின் அரசு ஹெஸ்ட்ஹவுசில் அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மண்டலம் விட்டு மண்டலம் வருவதற்கு இ-பாஸ் அவசியம். அதுவும் இ-பாஸ் இருந்தாலும் சென்னைக்குள் வேறு மண்டல ஆட்கள் நுழைய முடியாது. ஆனால், எவ்வித பாஸும் இல்லாமல் அரசு வாகனத்தில் சென்னைக்கு படையெடுத்தபடி இருக்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறையினர். பாஸ் இல்லாமல் வருபவர்களை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால், நோய்த் தொற்று பரவுவதற்கு வழியமைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள்.
சென்னைக்கு வந்து சென்ற மதுரை நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை மூடி மறைக்கின்றனர்.
இதுபற்றி மதுரை நெடுஞ்சாலைத் துறையின் சூப்பிரண்டெண்ட் இன்ஜினியர் செந்திலிடம் நாம் கேட்டபோது, ""கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அரசு அதிகாரி என்பதால் சென்னைக்கு வந்து செல்ல நெடுஞ்சாலைத் துறையினருக்கு இ-பாஸ் தேவையில்லை. பாஸ் இல்லாமல்தான் வந்து போகிறோம்'' என்கிறார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தீவிரமாக விசாரித்தபோது, ""சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இருக்கும் 2 உதவி தலைமை பொறியாளர்களுக்கும், இந்த அலுவலகத்துக்கு வந்து சென்ற மதுரை பணியாளர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை மூடி மறைக்கச் சொல்லி அனைவருக்கும் உத்தர விட்டுள்ளது மேலிடம். கொரோனா பற்றி கவலைப்படாமல் எஸ்டிமேட் தயாரிக்க பொறியாளர்களை கட்டாயப்படுத்துகின்றனர் உயரதிகாரிகள்'' என்கிறார்கள் அழுத்தமாகவும் உறுதியாகவும்.
இதுகுறித்து தலைமைப் பொறியாளர் சாந்தியின் கருத்தறிய பலமுறை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு எல்லைக்கே வெளியே இருந்தது அவரது ஃபோன். அவருடைய மொபைலுக்கு குறுஞ்செய்தியை நாம் அனுப்பியும் எந்த ரெஸ்பான்சும் இல்லை. 5,500 கோடிக்கான 650 டெண்டர்களில் உள்ள எந்த ஒரு பணியும் அவசரமானதோ அவசியமானதோ இல்லை. சதவீத கணக்கு களுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டப்பட்டு மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக் கப்படுகிறது. கொரோனாவை விட உச்சத்தில் இருக்கிறது நெடுஞ்சாலைத்துறையின் டெண்டர் ஊழல்.
-இரா.இளையசெல்வன்
படம் : குமரேஷ்
__________
இயற்கை வளம் அழிப்பு!
போக்குவரத்து அதிகமில்லாத சாலைகளில் போக்குவரத்து அதிகம் இருப்பதாகச் சொல்லி, தவறான தகவல்களை பெற்று, இருவழிச் சாலைகள், நான்கு வழிச்சாலைகள் அகலப்படுத்தப் படுகின்றன. இதனால் இயற்கை வளங்கள் வீணடிக்கப்படுகிறது என குற்றம்சாட்டும் சுற்றுச்சூழலியலாளர்கள், ’தமிழகம் முழுவதும் தற்போது டெண்டர் விடப்பட்டிருக்கும் பணிகளுக்கு மட்டுமே 8 கோடி கன அடி மண்ணும், 8 கோடியே 20 லட்சம் கன அடி சிறுகற்களும் (ஜல்லி), 4 லட்சத்து 60 ஆயிரம் டன்தாரும் பயன்படுத்த வேண்டியதிருக்கும். தேவையில்லாத சாலைகளுக்காக இவைகளை பயன் படுத்துவதன் மூலம் இத்தகைய இயற்கை வளங்கள் வீணாகிறது என்கிறார்கள்.
____________
ஆன்லைன் பித்தலாட்டம்!
நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்டர்களை முடிவு செய்துவிட்டே டெண்டர்களை அறிவிக்கும் நிலை இருக்கிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, டெண்டர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படுவதால், டெண்டர்கள் திறக்கப்படும் வரை காண்ட்ராக்டர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை‘’என தொடர்ச்சியாக கூறிவருகிறார். உண்மை நிலவரம் வேறு. வேலைக்கான தொகையை மட்டுமே ஆன்லைனில் காண்ட்ராக்டர்கள் குறிப்பிடுவார்கள். வைப்புத்தொகை, கருவிகள், தளவாடங்கள், சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் நேரடியாக கொடுக்க வேண்டும். தளவாட சான்றிதழ்களை கோட்டப் பொறியாளர்கள்தான் காண்ட்ராக்டர்களுக்கு தர வேண்டும். முடிவு செய்யப்பட்ட காண்ட்ராக்டர்கள், அவர்களின் சப்போர்ட்டிங் காண்ட்ராக்டர்களை தவிர மற்றவர்களுக்கு டெண்டர் கிடைக்காது. கடுமையாகப் போராடி ஆவணங்களை சிலர் வாங்கினாலும் அதனை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் மறுத்துவிடுவார்கள். டெண்டர்களை முடிவு செய்யும் போது, ஆவணங்கள் தரப்படவில்லையென மற்ற காண்ட்ராக்டர்களின் ஆன்லைன் விண்ணப்பங்களை நிராகரித்துவிடுவர். ஆக, நெடுஞ்சாலைத்துறையில் ஆன்லைன் டெண்டர் இருக்கிறது என்பதே பெரும் பித்தலாட்டம்.